“மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியின் அடையாளம்தான் விடியல் ஆட்சி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“விடியல் மக்களுக்காகதான், மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை. மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியின் அடையாளம்தான் விடியலின் ஆதாரம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடியல் ஆட்சி குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய வரலாறு திமுகவிற்குதான் உண்டு. நிச்சயமாக கூறுகிறேன். 7வது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திமுக அமையும். அதன் அடித்தளமாக அமைந்த இந்த ஆட்சி விடியல் ஆட்சியாக அமையும் எனக் கூறினோம்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் விடியல் எங்கே என கேட்கின்றனர்? விடியல் மக்களுக்காகதான், மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை. மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியின் அடையாளம்தான் விடியலின் ஆதாரம். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவையே விடியல் ஆட்சியின் சாட்சி.
மாதம்தோறும் 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தி உள்ளோம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். காலை உணவு திட்டத்தால் தெம்பாக படிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். இவைதான் விடியலின் சாட்சி.
புதுமைப்பெண், மகளிர் விடியல் பயணம் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் அன்போடு என்னை அப்பா அப்பா என்று அழைக்கின்றனர். மாணவிகள் என்னை அப்பா, அப்பா என அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டால் எதிர்க்கட்சியினர் அதிகம் வேதனை அடைவர். திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது. திராடவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலர் பயப்படுகின்றனர்” என தெரிவித்தார்.