For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி | பட்டியலின மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் எங்கே?

01:36 PM Jan 03, 2024 IST | Web Editor
rti மூலம் வெளிவந்த அதிர்ச்சி   பட்டியலின மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் எங்கே
Advertisement

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சம வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பட்டியல் சமூக மக்களுக்குத் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் RTI மூலம் வெளிவந்துள்ளது.

Advertisement

நெல்லையைச் சேர்ந்த முதுகலை பொறியியல் பட்டதாரி கருப்பசாமி என்பவர் பஞ்சமி நிலம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சியூட்டும் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி,  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் சமூக மக்களுக்குத் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் மொத்த பரப்பளவு சுமார் 12 லட்சம் ஏக்கர்.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் தற்போது பஞ்சமி நிலங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 133 ஏக்கர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்டுக் கண்டறிய முடியாமல் காணாமல் போன பஞ்சமி நிலங்கள் சுமார் 10 லட்சம் ஏக்கர்கள் என தெரியவந்துள்ளது. ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 113 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 11 ஆயிரத்து 556 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.  மாற்று சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் பரப்பளவு சுமார் 11, 556 ஏக்கர் எனவும் தெரியவந்துள்ளது.

அவற்றில் சுமார் 933 ஏக்கர் நிலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.  மேலும், 4431 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தற்போது உள்ள சூழலில் விருதுநகர்,  ராமநாதபுரம்,  நாமக்கல்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,  கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்சமி நிலம் இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற பட்டியல் சமூகத்தில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சம வளர்ச்சிக்காக 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும்.  பஞ்சமி நிலத்தில் பயிர் செய்தோ அல்லது வீடு கட்டிக் கொண்டோ பட்டியல் சமூக மக்கள் அனுபவிக்கலாம்.  பஞ்சமி நிலங்களைப் பிற சமூகத்தினர் வாங்கவும் முடியாது.  அப்படியே மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்தாலும் வாங்கினாலும் அது செல்லாது என்பது சட்டம்.

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி பஞ்சமி நிலங்களை பட்டியல் சமூகத்தவர் அல்லாதவர் வைத்திருப்பதைக் கண்டறிந்து மீட்டு அவர்களிடமே ஒப்படைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதென்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  ஓய்வு பெற்ற நீதியரசர் மருதமுத்து தலைமையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி குழுவும் அமைக்கப்பட்டது.

Advertisement