கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வழக்கு - பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, அவர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, தேர்தல் நேரத்தில், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த பென்டிரைவ்கள் பரவலாகப் பகிரப்பட்டன.
இது கர்நாடக அரசியலில் பெரும் பாப்பரப்பை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கர்நாடக அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். பின்னர், மத்திய அரசின் தலையீட்டிற்குப் பிறகு, இந்தியா திரும்பிய அவரை SIT குழு கைது செய்தது.
இந்த வழக்கில் ஒரு வீட்டுப் பணிப்பெண் அளித்த வாக்குமூலம் மற்றும் வலுவான தடயவியல் ஆதாரங்கள் முக்கிய பங்கு வகித்தன. நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவை பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், வீடியோ பதிவு செய்தல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், இது கர்நாடகாவின் அரசியல் களத்தில், குறிப்பாக தேவகவுடா குடும்பத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.