70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிச.11) 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நடப்பாண்டில் தொடர்ந்து 5-வது முறையாக ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் முந்தைய அளவிலேயே தொடரச் செய்ததுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது இந்த குறியீட்டு எண்ணானது முதன்முறையாக 70,048.90 புள்ளிகளை எட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (டிச.8) அன்று நடைபெற்ற வர்த்தகத்தை ஒப்பிடுகையில், இன்று சென்செக்ஸ் 132.53 புள்ளிகள் (அ) 0.19 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21,000 புள்ளிகளை தாண்டிய நிலையில், தொடர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.