ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா - ஏன் தெரியுமா?
வயதான நபர் ஒருவர் நடிகர் நாகார்ஜுனாவை பார்க்க அருகில் வந்த நிலையில், அவரின் பாதுகாவலர் அந்த முதியவரை கீழே தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து நாகார்ஜுனா அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்டார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ், அவருடைய மகன் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் விமான நிலையம் சென்றனர்.
அப்போது வயதான ரசிகர் ஒருவர் நடிகர் நாகார்ஜுனாவை சந்திக்க வந்தார். அவரை பாதுகாவலர் ஒருவர் வயதானவர் என்று கூட என்று பாராமல் கீழே தள்ளிவிட்டார். இதனை நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷின் செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனா இதுகுறித்து பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இது என் கவனத்துக்கு வந்தது.. இப்படி நடந்திருக்கக் கூடாது. நான் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.