கட்டாய முதியோர் இல்லங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக அரசு முதியோர் இல்லங்களை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டில் முதியோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், முதியோர் நலனுக்காக 2024-25 நிதியாண்டில் சுமார் 1.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முதியோர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், கட்டாயமாக அனைத்து மாவட்டங்களிலும் புதிய அரசு இல்லங்கள் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசு தரப்பு வாதிட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக அரசு முதியோர் இல்லங்களை அமைக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.