விளக்கமளித்த செபி தலைவர் - அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்து மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்!
“செபி தலைவர் மாதபி புச் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா? என்று ஹிண்டன்பர்க் கேள்வி எழுப்பியுள்ளது.
அதானி குழுமத்தின் மீதும், செபி தலைவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது அமெரிக்கா ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். கடந்த இரண்டு நாட்களாக ஹிண்டன்பர்க் வெளியிடும் அறிக்கைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக போலி நிறுவனம் மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக வெளியான ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால், மாபெரும் இழப்பைச் சந்தித்தது அதானி குழுமம். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஹிண்டன்பர்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவால் மக்கள் அனைவரும் குழம்பியிருந்தனர். இதனையடுத்து நேற்று அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில் மீண்டும் ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“செபி தலைவர் மாதவி புச் எங்கள் அறிக்கைக்கு அளித்த பதில் பல முக்கியமான சேர்க்கைகளை ஒப்புக்கொள்வதோடு, முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
மாதபி புச்சின் பதில் மொரீசியஸ், பெர்முடா நிதி அமைப்பில் வினோத் அதானியுடன் முதலீடு செய்ததை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதாக உள்ளது. மேலும் அந்த நேரத்தில் தவால் புச்சின் இளம் வயது நண்பர், அதானி இயக்குநராக இருந்ததையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் 2022 மார்ச் 16-ஆம் தேதி வரை, சிங்கப்பூரில் உள்ள Agora Partners Singapore என்ற தனது நிறுவனத்தில் 100 சதவிகித பங்குதாரராக செபி புச்சே இருந்துள்ளார். அவர் SEBI தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அந்த பங்குகளைத் தனது கணவர் பெயருக்கு மாற்றியுள்ளார்” என இன்னும் பல கேள்விகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ளது.
மேலும் இந்த பிரச்னைகள் தொடர்பாக செபி தலைவர் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.