விளக்கமளித்த செபி தலைவர் - அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்து மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்!
“செபி தலைவர் மாதபி புச் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா? என்று ஹிண்டன்பர்க் கேள்வி எழுப்பியுள்ளது.
அதானி குழுமத்தின் மீதும், செபி தலைவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது அமெரிக்கா ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். கடந்த இரண்டு நாட்களாக ஹிண்டன்பர்க் வெளியிடும் அறிக்கைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக போலி நிறுவனம் மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக வெளியான ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால், மாபெரும் இழப்பைச் சந்தித்தது அதானி குழுமம். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஹிண்டன்பர்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவால் மக்கள் அனைவரும் குழம்பியிருந்தனர். இதனையடுத்து நேற்று அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது.
புகாரில் தொடர்புடைய அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்ததாக தெரிவித்தது. இந்த அறிக்கை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு அதானி குழுமமும், மாதவி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சும் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“செபி தலைவர் மாதவி புச் எங்கள் அறிக்கைக்கு அளித்த பதில் பல முக்கியமான சேர்க்கைகளை ஒப்புக்கொள்வதோடு, முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
மாதபி புச்சின் பதில் மொரீசியஸ், பெர்முடா நிதி அமைப்பில் வினோத் அதானியுடன் முதலீடு செய்ததை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதாக உள்ளது. மேலும் அந்த நேரத்தில் தவால் புச்சின் இளம் வயது நண்பர், அதானி இயக்குநராக இருந்ததையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாதவி புச் 2017-ஆம் ஆண்டு SEBI-யில் நியமிக்கப்பட்ட போது, அவர் தொடங்கிய இரண்டு கண்சல்டிங் நிறுவனங்களிலும் அவரின் தொடர்பைத் துண்டிக்கப்பட்டதாகவும், 2019-ஆம் ஆண்டு முதல் அவரது கணவர் அதை நடத்தியதாகவும் கூறியுள்ளார். ஆனால், 2024 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, Agora Advisory Limited (India) நிறுவனத்தில் 99 சதவிகித பங்குகள் மாதபி புச் பெயரில் தான் உள்ளது. அவருடைய கணவர் பெயரில் இல்லை. அந்த நிறுவனம் இன்னும் செயல்பட்டும், வருவாய் ஈட்டியும் வருகிறது.
மேலும் 2022 மார்ச் 16-ஆம் தேதி வரை, சிங்கப்பூரில் உள்ள Agora Partners Singapore என்ற தனது நிறுவனத்தில் 100 சதவிகித பங்குதாரராக செபி புச்சே இருந்துள்ளார். அவர் SEBI தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அந்த பங்குகளைத் தனது கணவர் பெயருக்கு மாற்றியுள்ளார்” என இன்னும் பல கேள்விகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ளது.
மேலும் இந்த பிரச்னைகள் தொடர்பாக செபி தலைவர் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.