வாட்டி வதைக்கும் வெயில் - பழங்களின் விலை கிடுகிடுவென உயர்வு!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான ஈரோட்டில் வெயில் 107டிகிரியை கடந்து வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளவு சிறிய அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் வெயில் இருந்து தங்களை காத்துக் கொள்ள பழச்சாறு வகைகளை அதிக அளவு எடுக்கத் துவங்கியுள்ளனர். இதனால் பழங்களின் விலை கனிசமான அளவு உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கனி சந்தையை பொறுத்த வரை மாதுளை ஆரஞ்சு போன்ற பழங்களில் விலை 20 முதல் 50 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு காய்கனிச் சந்தை பழவியாபாரி நசீர் தெரிவித்ததாவது..
கடுமையான வெயிலின் காரணமாக பழங்களின் விலை கனிசமான அளவு உயர்ந்துள்ளது. அதன்படி சாத்துக்குடி பழத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து தற்போது 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ஆரஞ்சு பழத்தின் விலை 30 ரூபாய் உயர்ந்து தற்போது கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
அதேபோல தர்பூசணி வரவு நாளுக்கு நாள் அதிகமாக உள்ளதால் அதனுடைய விலையும் பத்து ரூபாய் உயர்ந்துள்ளது. தற்பூசணி கிலோ 15 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாதுளை பழத்தின் விலை ரூபாய் 50 உயர்ந்து 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெயில் காலம் என்பதால் எப்பொழுதும் விலையில் ஏற்றம் மற்றும் இறக்கமாகத்தான் இருக்கும். மாம்பழத்தின் வரத்து அதிகமாக இருப்பதனால் மாம்பழத்தின் விலை குறைந்தே காணப்படுகிறது.” என பழவியாபாரி நசீர் தெரிவித்தார்.