கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி திறப்பு எப்போது? சிறப்பு விசாரணைக் குழு விளக்கம்!
“பள்ளியினுடைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் அடிப்படையிலேயே பள்ளியை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக சிவராமன் உட்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்று விசாரணையும் தொடங்கியது. இந்நிலையில் சிவராமன் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கையின் போது சிவராமன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவராமன் மீது மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளதாகவும் எஸ்ஐடி தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளதாகவும், பள்ளியினுடைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பள்ளியை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.