“செங்கோல் மதம், அரசியல், இனம் தாண்டியது” - உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து!
செங்கோல் பற்றி பேசுவது விமர்சனங்களுக்கான பேச்சு இல்லை எனவும், அது மதம் தாண்டி, அரசியல் தாண்டி, இனம் தாண்டி ஒரு பெயரை பெற்றுள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டதன் ஓராண்டு நிறைவு நாளையொட்டி செங்கோல் மறுமலர்ச்சி விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிகா ரஞ்ஜனி சபாவில் கொண்டாடபட்டது. இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், துக்லக் ஆசிரியர் குருமூர்த்தி, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த விழா மேடையில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன்,
“சிவனுக்கு குருவாக உள்ள நந்தி இந்த உலகத்திற்கு ஒரு தலைவனாக இருப்பதால் தான் நந்தி உருவம் செங்கோல் மேல் அமைக்கப்பட்டுள்ளது. செங்கோல் என்பது ஒரு மறுமலர்ச்சி. நாம் எல்லோரும் செங்கோலை மறந்துள்ளோம். உண்மை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் அல்ல. அது மாபெரும் வடிவம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையுமே அரசோ, மன்னனோ செய்யமுடியாது.
இந்த உலகம் முழுவதும் வானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கும். செங்கோலின் முக்கியத்துவம் ஆகச் சிறந்த ஒன்று. அப்பொழுதுதான் அந்த நாடு ஒரு சிறந்த நாடாக விளங்கும். செங்கோல் நிலை மாறிவிட்டால் இந்த உலகத்தின் இயக்கமே மாறிவிடும். அதன் பிறகு இந்த உலகம் அதிகமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும். மன்னனுக்கு அழகு ஒரு செங்கோல் மேன்மை. செங்கோலை தொடாமல் எந்த படைப்பும் பெற முடியாது. தற்போது செங்கோல் நாட்டிலே உச்சமான இடத்தில் அமர்ந்துள்ளது.
செங்கோல் பற்றி பேசுவது விமர்சனங்களுக்கான பேச்சு இல்லை. அது மதம் தாண்டி, அரசியல் தாண்டி இனம் தாண்டி ஒரு பெயரை பெற்றுள்ளது. அனைத்து தலைவர்களின் ஆசிர்வாதத்தோடு செங்கோல் உயர வேண்டும். செங்கோலின் சிறத்தன்மை இந்த உலகம் இருக்கும் வரை நிலையித்திருக்கும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.