ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு வசதிகளை செய்து வரும் சௌதி அரசு!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளதையடுத்து, பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை சௌதி அரசு செய்து வருகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரை நேற்று (ஜூன் 14) தொடங்கியது. இதற்காக 15 லட்சம் பக்தர்கள் சவுதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர். ஹஜ் யாத்திரை மூலம், இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் ரஃபா எல்லை மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல முடியவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலை ஒட்டியுள்ள மேற்கு கரையிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், காஸாவில் நடைபெறும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோரும் ஹஜ் யாத்திரை மூலம் மெக்காவுக்கு வருகை தர, சௌதி மன்னர் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹஜ் பயணத்தின் நிறைவாக பக்தர்கள் 230 அடி உயர புனித அராஃபத் மலைக்கு சென்று வழிபடுவது வழக்கம். சவுதியில் இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அங்கு வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக பதிவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஹஜ் யாத்திரை செல்வோரில் பாதிக்கும் மேற்பட்டோர் வயது முதிர்ந்த பக்தர்களாவர். இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சவுதி அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவாக, அதீத வெப்பத்தால் கால்களில் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, மினாவிலிருந்து அராஃபத் வரையிலான பாதையில் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர்களால் பாதசாரிகள் நடந்து செல்ல பாதை போடப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்தால் ஏற்படும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோருக்கென மெக்காவில் உள்ள அல் நூர் மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது