"விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்" - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளவரையும், அனைத்து தரப்பு மக்களையும் ஏற்காதவரை இந்தியா கூட்டணி ஏற்காது. தங்கள் கூட்டணி பலம் வாய்ந்து இருப்பதாகவும் மேலும் சில கட்சிகள் கூட்டணிக்குள் வரும் என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமர் ஆக முடியாது என அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த செல்வபெருந்தகை, பிரதமரை தேர்ந்தெடுப்பது மக்கள் கையில் தான் உள்ளது, அதை விடுத்து அமித்ஷா ஹிட்லர் போல பேசுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கட்சி தொடங்கி இரண்டு வருடங்களே ஆன தமிழக வெற்றி கழகத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் எதிர்க்க வேண்டிய காரணம் என்ன?
அக்கட்சியை பார்த்து பயமா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், நல்ல சித்தாந்தத்தை கொண்டு விஜயகாந்த் தொடங்கிய கட்சி 10 விழுக்காடு வாக்குகளை பெற்றது. ஆனால் தற்பொழுது அந்தக் கட்சி இப்பொழுது உள்ள நிலை என்ன எனவும், நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜ ராஜ்ஜியம் தற்போது காங்கிரஸில் இணைந்து காணாமல் போய்விட்டதாகவும், அதேபோல் தமிழக வெற்றி கழகம் காணாமல் போகும் என மறைமுகமாக சாடினார்.
மேலும் துப்புரவு பணியாளர்கள் விவகாரத்தில் பதிலளித்த அவர், திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஒரு காலத்திலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டால் அதனை காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், மாவட்டத் தலைவர் திலகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.