குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு - சென்னையில் ஐநா நடத்திய 2 நாள் கருத்தரங்கு!
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு என்ற தலைப்பில் சென்னையில் ஐ.நா 2 நாள் கருத்தரங்கு நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.
ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும் இணைந்து தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன் "குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பரப்புவதில் அரசியல் கட்சிகளின் பங்கு" எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தியது. இதில் ஆளும் கூட்டணி கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி பேசியதாவது:
"குழந்தைகளுக்கு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், தன்னிச்சையாக முடிவெடுக்கவும் குழந்தைகள் உரிமைகள் வழி வகுகிக்கிறது. குழந்தைகள் வினா எழுப்புவதை ஊக்குவிப்பதும் அதற்கான சூழல்களை ஏற்படுத்தித் தருவதும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரின் கடமை ” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா தலைவர் கே.எல் ராவ் ” முன்னேற்றதிற்கு அரசியல் விருப்பம் அடிப்படைக் காரணம், தமிழ்நாட்டில் அது அதிகம் இருக்கிறது. அரசியல் கட்சிகளுடன் இணைந்து குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டுவதோடு குழந்தைகள் நல்ல எதிர்காலத்தை அடைவதற்கு அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது மிக முக்கியம்” என தெரிவித்தார்.
மேலும் திமுகவின் சார்பில் கலந்து கொண்ட செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ” அரசியல் கட்சிகளின் உதவியுடன் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்ய ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பு முனைப்பு காட்டுகிறது. உரிமைகளைத் தொடர்ந்து உறுதி செய்யும் போது குழந்தைகள் முழுத் திறன்களை அடைவதோடு எல்லோருக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல், குழந்தைகள் உரிமைகள் முன்னிலைப் படுத்துவதும் பாதுகாப்பதும் சமஉரிமைகள் மாண்பு குறித்தான நமது கூட்டு மதிப்புகள் பிரதிபலிக்கும். குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் அரசுகள், சமூகங்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரின் கடமையாகும். குழந்தைகள் உரிமைகள் குறித்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தேவை இருப்பதால் பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உரிமை சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையை அரசிடம்
பரிந்துரைக்கப்படும் ” என தெரிவித்தார்.
இதேபோல அதிமுக செய்தித் தொடர்பாளரான அப்சரா ரெட்டி ” முன்னேற்றத்திற்கான கொள்கை உரையாடலில் குழந்தைகளை முன்னிலைப் படுத்தும் போது பெற்றோர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுமுக நயனார், நர்மதா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராஜசேகர், பாஜகவின் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பிரதீப், மதிமுகவின் ஆசைத்தம்பி, வி. சி. க. செய்தித் தொடர்பாளர் பாவலன், ஆம் ஆதமி கட்சித் மாநிலத் தலைவர் வசீகரன், நாம் தமிழர் கட்சியைத் சார்ந்த சங்கர், இந்தியன் யூனியன் லீக் கட்சியைச் சார்ந்த காமில், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆபூ முகமது உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.