“மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைக்கும் அபாயம்....” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(பிப்.25) தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாடு உரிமை போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனால் வருகிற மார்ச் 5ஆம் தேதி 40 கட்சிகளையும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க அழைக்க உள்ளோம். ஏனென்றால் மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லா துறையிலும் வளர்ச்சியடைந்து முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 2026ல் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக இது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் செய்யப்படுகிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனை குடும்ப கட்டுப்பாடு, பெண்கல்வி மூலம் நிகழ்ந்துள்ளது.
மக்கள் தொகை குறைவாக இருப்பதால் மக்களவை தொகுதி எண்ணிக்கை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 8 தொகுதிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். அதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது. இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவு மட்டுமின்றி மாநிலத்தின் உரிமை சார்ந்தது என்பதை மறந்துவிடக்கூடாது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து முதற்கட்டமாகக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால் அனைத்து கட்சிகளும் அரசியலைக் கடந்து இந்த விவகாரத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல நீட் தேர்வு பிரச்னை, நிதி பிரச்னை போன்ற அனைத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால்தான் குரல் கொடுக்க முடியும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.