”திமுக ஆட்சியில் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிப்பு” - எதிர்கட்சித் தலைவர் #EPS விமர்சனம்!
'மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் திமுக அரசு தலையிடுவதாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெண் காவல் ஆய்வாளர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரையும், மற்றும் ஒருவரையும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடுமைப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் மணிக்குமார், ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளரை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீஸிங் ராஜா ஆகிய மூவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்க அதே துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கப்பட்டிருந்தார். சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இரு விசாரணையையும் முடித்து ஆணையத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், எந்தவித காரணமும் இல்லாமல் அந்த துணை காவல் கண்காணிப்பாளரை மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவிற்கு அரசு பணி மாறுதல் செய்துள்ளது. இந்த நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் துறையினர், தங்களுடைய ஏவல் துறையினராக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற இந்த ஆட்சியாளர்களின் எண்ணம் ஏற்கத்தக்கதல்ல. இதற்கொரு விடிவு காலத்தை தமிழக மக்கள் விரைவில் ஏற்படுத்துவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.