"மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது" - அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு- (SLAS) ஆய்வுக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் பிரதாப், தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலந்துகொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பாக விளங்கி வரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்பட்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களை கல்வித் தரத்தில் எவ்வாறு உயர்த்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு (SLAS) நடத்தப்படுவதாகவும், இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை அறிவதற்கும் அவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் விதமாக நடத்தப்படுகிறது, என்றும் இந்த அடைவுத் தேர்வில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அல்லது பாடப்பிரிவில் ஒரு மாணவர் பெற்றிருக்கும் அறிவையும், திறமையையும் அளவிடுவதற்கான ஒரு முறையாகும்.
இந்தத் தேர்வு மூலம் ஒரு மாணவர் எவ்வளவு தூரம் பாடங்களை கற்றுத் தேறியுள்ளார் என்பதை அறிய முடியும். மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை அளவிடுதல், மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்த உதவுதல், பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு தகவல்களை வழங்குதல், ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் முறைகளை மேம்படுத்த உதவுதல்.
எனவே, அடைவுத் தேர்வு என்பது ஒரு மாணவரின் கற்றல் திறனை அறியவும், அவர்களின் கற்றல் நிலையை மேம்படுத்தவும் மிகவும் முக்கியமான தேர்வாகும். பள்ளிக்கு வருகின்ற மாணவர்களை கல்வி முன்னேற்றத்தில் உயர்த்தக்கூடிய பொறுப்பு ஒவ்வொரு தலைமை ஆசிரியர்களிலும் வகுப்பு ஆசிரியர் கையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு), தேன்மொழி, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.