வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!
வயநாடு பகுதியில் 5 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 300 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (30.07.2024) அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். மண்ணில் புதையுண்டவா்களை மீட்கும் பணியிலும், சாலியாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் ஐந்தாவது நாளாக இன்றும் (03.08.2024) ஈடுபட்டுள்ளனா்.
நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் தொலைபேசி ‘ஜிபிஎஸ் சிக்னல்’ வாயிலாக அவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மீட்கும் பணிகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்து 40 மீட்புக் குழுக்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவா்களுடன் தமிழகத்திலிருந்து சென்றுள்ள 4 மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 340-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 300-க்கும் மேற்பட்டோரின் நிலைமை குறித்து விவரம் இல்லாத நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஓரிரு நாள்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இறுதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 1000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.