கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் - சீமான் பேட்டி...!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கை தேவை இல்லாதது. தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு என்னை அழைக்க மாட்டார்கள். அதிமுக பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கிறார்கள்.
சமநிலை சமூகத்திற்கான நோக்கத்தோடு பயணிப்பவர் சகோதரர் மாரி செல்வராஜ். அவரின் கலை படைப்பு 100% சரியாகத்தான் இருக்கும். ஜாதி படங்களை எடுக்கிறார் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சி, இயலாமையின் வெளிப்பாடு.
தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. தற்போது ஒன்றரைக் கோடிக்கு மேல் வந்துள்ளனர், ஒன்றரைக் கோடி பேரும் பிஜேபிக்கு தான் வாக்களிப்பார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்க மாட்டோம்.
நாம் தமிழர் கட்சி சார்பாக 2026 தேர்தலுக்கு 150-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதி பெரிய அளவில் திருச்சி மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதி என்பதால் அந்த பகுதியில் நடத்துகிறோம்.
கரூர் விவகாரத்தில் 41 பேரை நேரில் அழைத்து விஜய் பேசியுள்ளார். சிபிஐ விசாரணை செய்ய வேண்டிய நபர்கள் அனைவரையும் விஜய் சென்னைக்கு அழைத்து சென்று விட்டார். ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜய் இருவரையும் வழக்கில் சேர்க்காமல் இருப்பது கூட்டணிக்காக தான். கூட்டணிக்கு வரவில்லை என்றால் அவர் வழக்கில் சேர்க்கப்படுவார்கள். கரூர் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டவுடன் ஏன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றம் சென்றார். சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட உடன் ஏன் முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார் இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது” என சீமான் கேள்வி எழுப்பினார்.