“மின்கசிவுதான் காரணம்... சதி திட்டம் ஏதும் இல்லை” - ஏடிஜிபி கல்பனா நாயக் புகாருக்கு காவல்துறை விளக்கம்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால், தனது உயிரைப் பறிக்க சதி நடந்ததாக தமிழகப் பெண் ஏடிஜிபி அதிகாரி கல்பனா நாயக் புகார் அளித்து இருப்பது, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்துள்ளார். தமிழக டிஜிபியிடம் தெரிவித்த போதும் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் கல்பனா நாயக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறை தீக்கிரையான விவகாரத்தில் சதி திட்டம் ஏதும் இல்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அறையின் செம்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான சான்றுகள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர். தீக்கிரையான கல்பனா நாயக்கின் அறையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் பயன்பாடு கண்டறியப்படவில்லை.
ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் வேண்டுமென்றே தீ வைப்புச் செயல் எதுவும் நடைபெறவில்லை” என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.