“வயநாடு பேரழிவுக்கு பசுக்களை கொன்றதே காரணம்” - பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!
வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோர் பலியானதற்கு காரணம் பசுவதையே எனவும் பசுக்களை கொல்வதை நிறுத்தவில்லை என்றால் மேலும் இது தொடரும் எனவும் பாஜக மூத்த தலைவர் கியான்தேவ் அஹுஜாபேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போதுவரை 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானின் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா அளித்த பேட்டி ஒன்றில், ‘‘கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து கேரளாவில் நிலச்சரிவுகள், வெள்ளம், நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பசு வதைதான் காரணம். உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படுகிறது.
ஏற்கனவே இவர் கடந்த 2017ல் பசுக்களை கடத்துபவர்கள் அடித்து கொல்லப்படுவார்கள் என மிரட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.