“திமுக அரசுக்கு களப்பணியில் கிடைக்கும் நல்ல பெயருக்கு காரணம் தூய்மை பணியாளர்கள்தான்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்கள் போல் வேறு எந்த ஆட்சியிலும் செய்யப்படவில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலைப்பு சட்டத்தை உருவாக்கியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக போராடியவருமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு நாளான இன்று தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் வகையில் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகளையும், 30 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
“அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் அவரை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். அம்பேத்கரின் சிந்தனைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக எனது ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சியில்தான் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டது. திருமாவளவன் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது .
பட்டியலினத்தைச் சேர்ந்த 2136 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்காக தனியாக தொடங்கப்பட்ட திட்டம்தான் “அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்”. ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம் என எல்லா வகையிலும் மேம்பாடு அடைய வேண்டும். அதுதான் உண்மையான விடுதலை என அம்பேத்கர் கருதினார். அந்த வழியில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். நாட்டின் விடுதலைக்குப் பின் பட்டியலின, பழங்குடியினருக்கு முதன்முதலாக தொடங்கப்பட்ட தொழிற்திட்டம் இதுதான்.
இந்த திட்டம் மட்டுமல்ல கடந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்கள் போல் வேறு எந்த ஆட்சியிலும் செய்யப்படவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதில் திமுக அரசுக்கு வரும் நல்ல பெயருக்கு தூய்மை பணியாளர்கள் முக்கிய காரணம். மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்றுவதன் மூலமே மழை வெள்ளத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது. தூய்மை பணியாளர்கள் என்று சொல்வதைவிட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்று கூறலாம்.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே திமுக அரசின் இலக்கு. கழிவுநீர் அகற்றும் பணிகளை இயந்திரமாயமாக்கி உள்ளோம். எந்த மாநிலமும் நிறைவேற்றாத புதுமை திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. ஏதாவது ஒரு இடத்தில் பட்டியல் இனத்தவருக்கு நடந்த சம்பவத்தை மாநிலம் முழுவதும் நடப்பது போல் பெரிது படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் மதவெறியை பரப்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் எடுபடாது. மதவெறி, சாதி வெறி கொண்டவர்களின் எண்ணம், இந்த பெரியார், அம்பேத்கரின் மண்ணில் இந்த ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது” என தெரிவித்தார்.