குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திய ‘ரயில் மதத்’ செயலி.. பயணி கூறுவது என்ன?
ரயில் மதத் செயலியில் தான் அளித்த புகார் தனக்கு குற்ற உணர்ச்சியாக உள்ளது என பயணி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ரயில் சேவைகள் தொடர்பான தங்கள் புகார்களை தெரிவிக்க ‘ரயில் மதத்’ எனும் மொபைல் செயலி செயல்பாட்டில் உள்ளது. இதனை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவங்கி வைத்தார். இந்த செயலியில் மூலம் அளிக்கப்படும் புகார்களுக்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த செயலியின் மூலம் அளிக்கப்பட்ட புகார் ஒன்றுக்கு ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயணி ஒருவர் தனக்கு தலையணை இல்லை என ரயில் மதத் மூலம் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரின் அடிப்படையில் அந்த ரயிலின் உதவியாளருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் Reddit -ல் கூறியுள்ளதாவது;
“இன்று முதல்முறையாக ‘ரயில் மதத்’ செயலியை பயன்படுத்தினேன். அதில் எனக்கு தலையணை கிடைக்கவில்லை என புகாரளித்தேன். அதற்கு ரயில்வே பணியாளருக்கும், அதிகாரிக்கும் சம்பள பிடிப்பு செய்யப்படும் என தெரிவித்தனர். பின்னர் என்னுடன் வந்த சகபயணிதான் இரண்டு தலையணைகளை எடுத்தார் என்பது தெரிந்தது. என்னுடைய இந்த செயல் அவர்களை இவ்வாறு தண்டித்தது என தெரிந்ததையடுத்து நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன்.
‘ரயில் மதத்’ செயலியை பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைக்கும் உதவியாளரை முதலில் அணுகி, குறுக்கு சோதனை செய்ய வேண்டும். கடைசி வாய்ப்பாக (ரயில் மதத்) இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
நேற்று பகிரப்பட்ட இந்த பதிவிற்கு பல கருத்துகள் வந்து குவிகின்றன.