கிணற்றில் தவறி விழுந்த மலைப்பாம்பு - மேலே வர ஏணி அமைத்த வனத்துறையினர்!
மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து, 5 நாட்களாக தண்ணீரில் தத்தளித்து வந்த மலைப்பாம்பிற்கு, மேலே ஏறி வர வனத்துறையினர் ஏணி அமைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமன், குருநாதன். இவர்களுக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள 60 அடி ஆழக் கிணற்றில், சுமார் 7 அடி அளவில் தண்ணீர் இருக்கும் நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மலைப்பாம்பு ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது.
கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு தண்ணீரில் தத்தளித்து வருவதை நில உரிமையாளர்கள் பார்த்த நிலையில் வனத்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இறங்கி மலை பாம்பினை பிடிக்க இயலாது என மறுத்து சென்றதாக தெரிகிறது. மேலும் மலை பாம்பினை பிடிக்க இயந்திரங்கள் தேவை என்றும், அதற்கு சுமார் ரூ.30,000 செலவாகும் என்றும் கூறியதாக நில உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கிணற்றில் இறங்கி மலைப்பாம்பை பிடிக்க தயங்கிய துவரங்குறிச்சி வனத்துறையினர் மலைப்பாம்பு தானாக மேலே ஏறி வர, கிணற்றிலிருந்து மேல் தட்டு வரை படிக்கட்டு அமைத்துள்ளனர். பாம்பு இன்னும் மூன்று நாட்களுக்குள் கிணற்றிலிருந்து தானாக மேலே ஏறி வெளியே வந்து விடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.