மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மரக்காணம், கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடவில்லை என அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அப்பரிசு தொகுப்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள கழிக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், புதுக்குப்பம் மற்றும் கழிகுப்பம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.