அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் புதிய முயற்சி!
படியில் தொங்கும் மாணவர்களின் செயல்களால் ஏற்படும் விபத்தினை தவிர்க்க,
காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை அனைவரும் வரவேற்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண பேருந்து அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பயனை சற்றும் உணராமல் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்தனமாக பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளையும், சில சமயம் உயிரிழப்பையும் சந்திக்கும் நிலை மக்களை வருந்த செய்கிறது.
இந்நிலையில், இது போன்ற பயண நேரத்தில் விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் பணிமனையில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின்
படிக்கட்டுகளில் இரு பகுதிகளிலும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்ததால் காஞ்சிபுரம் பணிமணியின் கீழ் செயல்படும் அனைத்து நகர பேருந்துகளிலும் இதுபோன்ற தகரம் பொருத்தும் பணியில் தொழிற்பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
படியில் ஏறி உள்ளே செல்லும் வகையில் மட்டுமே பேருந்துகள் இனி இருக்கும் என்பதால் விபத்துக்கள் குறையும் எனவும், இதன் பிறகு மாணவர்கள் தங்கள் உயிரின் மதிப்பை அறிந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.