தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால், தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
"திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் எதுவுமில்லை.
இன்னும் ஓரிரு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.