“பொது நூலகத்தில் ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற தேர்வுகளுக்கு தேவையான குறிப்பேடுகள் இல்லாத நிலை!” - தேர்வாளர்கள் வேதனை!
ஈரோடு பேருந்து நிலையம் அருகே வீரபத்திரா வீதியில் கடந்த 1952 ஆம் ஆண்டு 600 புத்தகங்களுடன் துவங்கிய பொது நூலகம் தற்போது ஒரு லட்சத்து 67 ஆயிரம் புத்தகங்களுடன் ஈரோட்டின் மையப் பகுதியில் பொது நூலகமாக விளங்கி வருகிறது.
இந்த நூலகத்தில் புத்தகங்களை வாங்கி வீட்டிற்கு சென்று படித்து திரும்பி வரும் உறுப்பினர்களாக சுமார் 17,000 பேர் உள்ளனர். இந்த நூலகத்தில் அறிவியல் சட்டம், கதை, இலக்கியம், விளையாட்டு, பொது அறிவு உள்ளிட்ட 42 துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் இங்கு உள்ளன.
இந்த நிலையில் தற்போது பொது நூலகத்தில் குரூப்-1 குரூப் 2 போன்ற தேர்வு எழுதுபவர்களுக்கு என்று தனியாக கலந்துரையாடல் அறை வேண்டும். தமிழகத்தில் பிரபலமான ஐஏஎஸ் அகாடமிகளான வெற்றி,சங்கர் போன்ற அகாடமியில் உள்ள வெற்றி தொகுப்புகள் இங்கு இடம்பெற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மேலும் இந்த நூலகத்தில் 1985 ஆண்டு வரையிலான புத்தகம் முதல் 2000 ஆண்டு வரையிலான புத்தகம் வரை மட்டுமே உள்ளது. அதற்கு பிறகு உள்ள ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்களில் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இணையதள வசதி வேகம் இன்றி குறைந்த வேகத்தில் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் இந்த பொது நூலக கட்டடத்தில் முறையான கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை என்று வாசகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பொது நூலகம் ஆனது ஈரோடு பேருந்து நிலையத்தை ஒட்டியே இருப்பதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வருகின்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வசதியாக உள்ள நிலையில் இந்த நூலகத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுவது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றுத்திட்டத்தை கைவிட்டு இதே இடத்தில் நூலகம் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த நூலகத்தை சுற்றி குப்பை கூலங்கள் ஆக்கிரமித்துள்ள நிலை மட்டுமில்லாமல் நூலகத்தை சுற்றி வணிக நிறுவனங்களான காய்கறி கடை பழக்கடைகள் ஆக்கிரமித்து செயல்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நூலக அதிகாரி தெரிவித்தும் இதுவரை ஆக்கிரப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் இந்த நூலகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி சிறப்பு ஊதியம் ரூ.12 ஆயிரம் பெற்று வேலை செய்து வரும் ஊழியர்களை கருத்தில் கொண்டு இவர்களை மூன்றாம் நிலை ஊழியராக பணி உயர்த்த வேண்டும் எனவும் நூலக ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.