For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள ஆய்வு | போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.. தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
07:48 PM Jul 01, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள ஆய்வு   போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி    தொடரும் அவலம்   நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Advertisement

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கழிவறை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்களின் சிரமத்தை தெரியப்படுத்தும் வகையில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி களஆய்வு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்கள் இந்த நிலைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

திருச்சி

திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நம் டாய்லெட் கட்டுப்பட்டது. இந்த கழிவறை தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. கழிவறை அருகே உள்ள நடைபாதையை கடந்தால் மூக்கை பிடிக்க வேண்டிய சூழல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்களின் வரிப்பணம் எங்கே? எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வேலை என்ன? நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலையா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உதகை

உதகை அரசு தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள், மத்திய பேருந்து நிலையம், கமர்சியல் சாலை, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது கழிப்பிடங்கள் இருந்தன. இவை முற்றிலுமாக இடிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிப்பிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கியது. தற்போது வரை பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆலங்காயம்
ஒன்றியத்துக்குகட்பட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனி கழிவறை மற்றும் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வளையாம்பட்டு ஊராட்சியில் உள்ள
உமர்நகர் உருது அரசு தொடக்கப்பள்ளியில் 3 கழிவறைகள் உள்ளன. அதில் 2 கழிவறைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டி கிடப்பதால்
மற்றொரு ஒரு கழிப்பறையை பெண் பிள்ளைகள் மற்றும் ஆசிரியைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் சென்று வரும் அவல நிலை உள்ளது.

பெண் பிள்ளைகள் மற்றும் ஆசிரியைகள் பயன்படுத்தி வரும் கழிவறையில் விஷ
பாம்புகள் உள்ளே வருவதால் அச்சத்தில் சென்று வருகின்றனர். கழிப்பறை திறந்த
வெளியில் மேற்கூரை இல்லாமல் உள்ளதாலும் , கழிவறையில் கதவுகள் சரியில்லாமல் உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பாப்பானேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை பழுதான நிலையில் அவற்றை இடித்து விட்டு தற்போது புதிய கழிவறை கட்டப்பட்டு வருகிறது

அங்கு ஆண்கள் பெண்கள் என இருபாலர் படித்து வரும் நிலையும் ஒரே கழிவறை மட்டுமே கட்டப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் இணைப்பு கொடுக்காமல், தண்ணீர் தேக்க தொட்டி அமைக்காமல் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்திரா நகர் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
ஆண்கள், பெண்கள் என இருபாலர் படித்து வரக்கூடிய நிலையில்
ஆண்கள் பயன்படுத்தி வந்த கழிவறை கட்டிடம் பழுதானதால் அதை இடித்து விட்டு தற்போது பெண்கள் பயன்படுத்தி வந்த ஒரே கழிவறையை ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தி வரக்கூடிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே விரைந்து ஆண்களுக்கு கழிவறை கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அங்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருவதால் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு தனி கழிவறை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஒரு ஆன்மீக ஸ்தலமாகவும் சுற்றுலா
ஸ்தலமாகவும் விலங்குகிறது. இதன் காரணமாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும், விடுமுறை மற்றும் திருவிழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடிவிட்டு கோயிலுக்கு உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவர். பின்பு, ராமநாதசாமி மற்றும் ஸ்ரீபர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடி மற்றும் அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு
நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில், போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் வடக்கு வாசல் பகுதியில் இலவச கழிவறை வசதி ஒன்றும், அதேபோல நகராட்சி சார்பில் கிழக்கு வாசல் பகுதியில்
ஒன்றும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் இரண்டு கழிவறைகள் உள்ளன.
தற்போதுள்ள நிலவரப்படி வடக்கு வாசல் பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில்
கட்டப்பட்டுள்ள கழிப்பறை மட்டும் இயங்கி வருகிறது.

ஆனால் அதுவும் அடிக்கடி சுத்தம் செய்வதாக கூறி எப்போதும் மூடி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே பயன்பாட்டுக்கு வருகிறது எனவும் கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி அருகில் உள்ள தனியார் விடுதிகளில் உள்ள கட்டண கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கழிவறைகளில் கிழக்கு
வாசல் பகுதியில் அமைந்துள்ள கழிவறை மட்டும் ஒரு சில மணி நேரம் மட்டும்
திறக்கப்பட்டு அடைத்து விடுகின்றனர். மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில்
இருந்து சங்கமால் கடற்கரைக்கு செல்லக்கூடிய பகுதியில் கடந்த 2000 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா மட்டுமே காணப்பட்டது. ஆனால் அந்த கழிவறையானது கடற்கரை பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சென்று அந்தக் கழிவறையை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தரப்பில் தயக்கம் காட்டுவதால் திறப்பு விழா கண்டது முதல் தற்போது வரை பயன்பாடு இல்லாமல் சிதலமடைந்து கிடைக்கிறது.

அதே போல அக்னிதீர்த்த கடற்கரைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள மொபைல்
டாய்லெட் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டு குறுகிய காலம் மட்டுமே பயன்பாட்டு
கொண்டுவரப்பட்டு, அதுவும் தற்போது நீண்ட காலமாக பூட்டியே கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  உடனடியாக நகராட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும்,
பத்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறைகளை கூடுதலாக கட்ட வேண்டும் எனவும் பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறையை திறக்க வேண்டும், பயன்பாட்டில் உள்ள கழிவறைகளை 24 மணி நேரமும் திறந்து, பக்தர்கள் பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் 28 லட்சத்தில் கட்டப்பட்ட
பொதுக்கழிப்பிடம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் வேலி வைத்து
அடைக்கப்பட்டுள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரண்டே கட்டணக் கழிப்பிடம் உள்ள நிலையில் மீண்டும் பொதுக் கழிப்பிடத்தை சரி செய்து இலவசமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தளங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகருக்கு நாள்தோறும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா. மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கின்றனர். அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு 14 கிலோமீட்டர் கிரிவலம் வருகின்றனர். அப்படி கிரிவலம் செல்லும் பாதைகளில் கழிவறைகள் பெரும்பாலும் பூட்டப்பட்டு உள்ளதாகவும் போதிய பராமரிப்பின்றியும் உள்ளதால் பக்தர்களும் சுற்றுலா வாசிகளும் தெரிவிக்கின்றனர்.

மேலும் கோயிலை சுற்றியுள்ள மாட வீதி பகுதிகளிலும் பௌர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கூடுவதால் ஆங்கேயும் அருகருகே கழிவறைகள் வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கின்றனர். இது மட்டுமின்றி தற்போது செயல்பட்டு வரும் கழிவறைகள் போதிய பராமரிப்பு இன்றி உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் போதிய கழிவறைகளை ஏற்படுத்தி சுகாதாரமான முறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என கோரிக்கை
வைக்கின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் என்பது சென்னையில் இருந்து தென்
மாவட்டங்கள் செல்லும் பயணிகளின் முக்கிய பேருந்து நிலையமாக விழுப்புரம்
பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட
பேருந்துகளும் லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகளும் விழுப்புரம் பேருந்து
நிலையத்தை வந்து செல்கின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 6 பொது கட்டண கழிப்பறை உள்ளது. இவை அனைத்தும் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பேருந்து உள்ளே வரும் வழியில் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பொது கழிப்பறை ஒன்று சரியாக திறக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாற்றுகின்றனர்.

மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகவும் தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் இருக்கும் பொது கழிப்பறைகளில் இரவு நேரங்களில் மிக அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொது கழிப்பறைகள் முறையாக பராமரிப்பது இல்லை உள்ளே சென்றால் முகம் சுளிக்கும் அளவிற்கு கழிப்பறை நிலை உள்ளது எனவும் பேருந்து பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாள்மலை பகுதியில் 3000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் லைன் வீடுகள் அதிகளவில் உள்ளன. பெருமாள்மலை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களுக்கும் பெண்களுக்குமென பொதுகழிவறை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் போதிய பராமரிப்பின்றி இருந்த இந்த கழிவறை இடிக்கப்பட்டது.

இதனால் அருகே உள்ள காட்டு பகுதிக்கும், வீட்டுமனைகளுக்கும் மலம் கழிக்க
செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக
பெரும்பாலானவர்கள் கழிவறை வசதிக்காகவே வீடுகளை காலி செய்து சென்றுவிட்டதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் பெருமாள் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களும், பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் அந்த கழிவறையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது போதிய வசதியில்லாததால் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

சேலம்

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர். குறிப்பாக, அரசு விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் கிளியூர் நீர்வீழ்ச்சியில் கழிப்பிட வசதியும், உடை மாற்றுவதற்கான இடமும் இல்லாதது சுற்றுலாப் பயணிகளை முகச்சுளிக்க வைத்துள்ளது.

அதேபோல், பக்கோடா பாயிண்ட் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததாலும், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் கழிப்பிட வசதிகள் இருந்தும் சரி வர செயல்படாததும் சுற்றுலாப் பயணிகளை மேலும் வருத்தமடையச் செய்கிறது. ஏற்காடு ஒண்டிக்கடை அருகே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
பயன்படுத்தும் கழிப்பறை இருந்தும் முறையாக பராமரிக்கப்படாததால் உள்ளூர் மக்களே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம்

தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பொதுகழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாமல் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முறையாக டெண்டர் விடப்படாமல் விதிமுறைகள் மீறி கழிவறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலான கழிவறைகள் மூடியே கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளார். தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதிகாரிகள்பொதுசுகாதாரத்துறையில் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வேலாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதுமான கழிவறைகள் இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை தற்போது பார்க்கலாம்...

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வேலாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதுமான கழிவறைகள் இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அண்டக்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான கழிவறைகள் இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் மாநகராட்சி பகுதியில் சமுதாய கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள மடப்புரம் கிராமத்தைச் சேர்த்து திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன்
கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் மட்டும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோயிலில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமை கவலையை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களுக்காக ரூ.29.20 லட்சம் செலவில் கழிப்பறை கட்டப்பட்டிருந்தாலும், தற்போது அதில் ஒன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள மூன்று கழிப்பறைகள் பூட்டிய நிலையில் உள்ளன என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், கழிப்பறை கட்டடம் அருகில் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதோடு,
தற்போது பயன்பாட்டிலிருக்கும் ஒரே கழிப்பறையும் சிதிலமடைந்துள்ளதாக
கூறப்படுகிறது. இதனால், குறிப்பாக பெண்கள் பெரும் அவதியை அனுபவித்து
வருகிறார்கள். அனைத்து கழிப்பறைகளும் முறையாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம்
உள்ளது. இங்கிருந்து ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களான புதுப்பட்டி,
கன்டபட்டி, ரெட்டியார்பட்டி, ஆண்டிப்பட்டி, நல்லூர் உள்ளிட்ட 32
கிராமங்களுக்கு மினி பேருந்துகளும், திருநெல்வேலி, தென்காசி மார்க்கமாகவும்,
ஊத்துமலை, சங்கரன்கோவில், சுரண்டை, முக்கூடல், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட
பகுதிகளுக்கு அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு
வருகின்றன.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட
தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆலங்குளம் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் ஆண், பெண்களுக்கு என்று தனித்தனியாக ஒரே ஒரு இலவச கழிப்பிடம் மட்டும் உள்ளது. ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி பராமரிப்பில் உள்ள இந்த கழிப்பிடம் பராமரிப்பின்றி பயணிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது.

கழிப்பறையின் கதவுகள் உடைந்து போய் உள்ளன. நீண்டகாலமாக
பராமரிப்பின்றி காணப்படும் இந்த கழிவறையை சீரமைக்க வேண்டும். தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை

கோவை சூலூர் பேருந்து நிலையத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள இலவச கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை சிறப்பு நிலைப் பேரூராட்சியில் 35000 மக்கள் வசிக்கும் பகுதியில் 1000-ற்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவரை இல்லை. அந்த பகுதிகயில் 5 கழிவரைகள் பூட்டப்பட்டும், 1 கழிவரை இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் திறந்தவெளியில் பெண்கள் இயற்கை உபாதை கழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஆட்சியர் தலையிட்டு ஆய்வு செய்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதகை

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில பயணிகள் செல்லும் முக்கிய
பேருந்து நிலையமாக உள்ள உதகை மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு இலவச பொதுக்கழிப்பிடம் இல்லாததால் பேருந்து நிலையத்தின் அருகே பொது இடங்களில் பயணிகள் சிறுநீர் கழித்து செல்லும் நிலை உள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் அவ்வளியாக செல்லக்கூடிய பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிதாக கட்டப்பட்டு வரும் பொது கழிப்பிடத்தின் கட்டுமான பணிகளை உதகை நகராட்சி
நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தின் அடுத்தபடியாக பெரிய நகரம் என்று கருதப்படக் கூடியது மேலூர். இப்பகுதியில் பேருந்து நிலையம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம் நடுவர் நீதிமன்றம் போன்ற மக்கள் அதிகம் கூறக்கூடிய பகுதிகளில் தூய்மை கழிப்பறை இருக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் மேலூர் பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி
அரசு மருத்துவமனை அரசு கலைக்கல்லூரி என பத்திற்கு மேற்பட்ட கல்லூரிகளும்
20-க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் அன்றாடம் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் அதாவது சுற்றியுள்ள
கிராமங்களில் இருந்து மேலூர் பகுதிக்கு வேலைக்கு வருபவர்கள் மற்றும் வேலை
முடித்து வீட்டிற்கு செல்பவர்கள் என ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சத்துக்கு
மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாகவும், மேலும் அதிக கடைகள், சந்தைகள், பால சந்தை என அதிக மக்கள் வந்து செல்லும் பகுதிகளாக பார்க்கப்படுகிறது.

இதனால் உடனடியாக மேலூரில் பல பகுதிகளில் கழிப்பறை அதாவது தூய்மை கழிப்பறை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கு இரண்டு பணியாளர்களை அமர்த்தி வேலை ஈடுபடுத்த வேண்டும் எனவும் கழிப்பறையில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர வேண்டும் என்று என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மையற்ற கழிவறைகளை பயன்படுத்தினால், தோல் நோய், நுரையீரல் பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிக்கின்றனர். கழிவறைகளில் தண்ணீரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தூய்மையான முறையில் கழிவறைகள் இருந்தாலே நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement