“சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டம் தொடரும்!” - உமர் அப்துல்லா கருத்து!
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் உமர் அப்துல்லா கூறியுள்ளதாவது: “ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், மனம் தளறவில்லை. எங்களின் போராட்டம் தொடரும். ஜம்மு - காஷ்மீரை அடைய பாஜகவுக்கு பல சதாப்தங்கள் ஆனது. நீண்ட போராட்டத்துக்கு தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.