For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” - திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

10:44 PM May 24, 2024 IST | Web Editor
“திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் ”   திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு
Advertisement

பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். 

Advertisement

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (24.05.2024) நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) விழாவுக்கு தலைமை தாங்கினார்.

திருவள்ளுவர் திருநாள் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று, 24 மே, 2024 (வைகாசி அனுஷத்தில்) தமிழறிஞர்களான மறைமலை அடிகளார், டி.பி. மீனாட்சிசுந்தரம்,  கல்யாணசுந்தரம் ஆகியோரின் மரபை போற்றி முன்னெடுக்கும் வகையில், பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவள்ளுவரின் பக்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய தங்கள் எண்ணங்களை பல புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். திருக்குறளில் உள்ள கருப்பொருள்களை கொண்ட கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் தனது தலைமை உரையில், தனது பள்ளிப் பருவத்திலிருந்தே திருவள்ளுவர் மற்றும் திருக்குறளுடன் தனக்கிருந்த நீண்ட தொடர்பையும், சில குறள்கள் தனது வாழ்வை எவ்வாறு வடிவமைத்து மாற்றியமைத்தன என்பதையும் விவரித்தார். அதில், "தமிழ்நாட்டு ஆளுநராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பரந்த மற்றும் மகத்தான ஆழமான விஷயங்கள் குறித்து ஆச்சரியம் அடைந்தேன்," என்று அவர் கூறினார். "திருவள்ளுவர் வாழ்க்கை பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். திருக்குறள் மிகவும் விரிவான தொகுப்பு மற்றும் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு வாழ்க்கை முழுமைபெறுவது போல ஒரு ஒருங்கிணைந்த வாழ்வின் மிகப்பெரிய விரிவாக்கத்தைக் கொண்டது," என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

திருக்குறளின் பலவகை மொழிபெயர்ப்புகளையும் கருத்துரைகளையும் படித்துள்ளதாக கூறிய ஆளுநர், அவை பெரும்பாலும் அறிவார்ந்த மற்றும் ஆன்மிக சித்தாந்த  நோக்கத்துடனும் எழுதப்பட்டவை என்றார்.

"ஒரு சாதாரண மனித மனதால் திருவள்ளுவரையும் அவரது போதனைகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவர் மிகப்பெரியவர் என்று அவர் வலியுறுத்தினார். நன்னடத்தை பற்றிய அவரது விளக்கம், ஆதிபகவான் மீதான முழு பக்தி, இணக்கமான குடும்பம் மற்றும் சமூகத்தை வலியுறுத்துவது, ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கிய விரிவான பரிந்துரைகள், துறவிகளுக்கு வழங்கிய கடுமையான அறிவுரைகள், விவசாயிகளைப் போற்றியும், சிறிய மற்றும் பெரிய என அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த போதித்து, உண்மையை தேடும் அவரது வேட்கை, ஐம்புலன்களை அடக்கி உடலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறியும் ஆற்றல் மற்றும் அவரது பிற போதனைகள், ஒருவரால் எப்படி இவ்வாறு சிந்திக்க முடியும் என்றும் தனது எண்ணத்தில் தோன்றிய சிந்தனைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறள் வடிவில் சாத்தியமாக்கியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. அனைத்தையும் அழகாக இயற்றப்பட்ட குறையற்ற குறள்கள் வடிவில் கொண்டு வந்த திருவள்ளுவரின் உயர்ந்த மனிதப் பண்பு மற்றும் நிலைப்புத்தன்மை, தமிழ் மொழி மீதான அவரது அசாதாரண ஆற்றலை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

திருவள்ளுவர் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து, தொன்மையான, வளமான தமிழ் மொழியைப் பேசியும், எழுதியும் இருக்கிறார் என்பது நமக்குப் பெருமை. திருவள்ளுவர் மனித குலத்துக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற தெய்வீகப் பரிசு.

நாம் அனைவரும் அவரையும் அவரது மரபையும் போற்றுவோம். அதுவே திருவள்ளுவருக்கு நாம் செலுத்தக் கூடிய மிகவும் பொருத்தமான மரியாதையாக இருக்கும். அவரது போதனைகளின்படி வாழ முயற்சிப்போம்," என்றார் ஆளுநர்.

நான் இங்கு ஆளுநராக வீற்றிருப்பதைவிட திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பேருவகை கொள்கிறேன்.

திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் எனக்கும் உணர்ச்சிமிகு தொடர்பு உண்டு. மின்சாரம், சாலைவசதி இல்லா காலத்தில் எனக்கு பள்ளி பருவத்தில் ஒரு லட்சியம் இருந்தது.

எனக்கு பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன். 1964 ஆம் ஆண்டு ஒரு சரஸ்வதி பூஜை அன்று பள்ளி நூலகத்தில் இந்தி புத்தகம் ஒன்றில் பாரதத்தின் தென் கோடியில் ஒரு மஹான் இருந்தார் அவர் திருவள்ளுவர் என்று அதில் போடப்பட்டு அவர் எழுதிய குறளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. பலரும் இந்த மேடையில் உச்சரித்த குறள் அது. அது எனக்கு உத்வேகம் ஊட்டிய குறள் அதுதான்

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்"

கீதையை பள்ளி நாட்களில் படித்து மனப்பாடம் செய்துள்ளேன். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கிற வரிகள் என் வாழ்க்கையில் பணிகளில் கடைபிடித்துள்ளேன். ஆனால் திருக்குறள் என் வாழ்க்கையில் வந்தப்பின் அது வேறு வகையில் என் வாழ்க்கையில் புது அனுபவத்தை தந்தது.

அந்த காலத்தில் எனக்கு திருக்குறள் கிடைக்கவில்லை. தமிழகம் வந்தவுடன் எனக்கு கிடைத்த முதல் நூல் திருக்குறள் ஒவ்வொரு தடவை திருக்குறளை வாசிக்கும்போதும் எனக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைத்தது. குறள் இரண்டடிதான் ஆனால் ஏராளமான பொருள்பதிந்தது. நான் குறளை வாசிக்க வாசிக்க எனக்கு அது தனிநபராக குடும்பதலைவனாக வாழ்க்கையில் பல விஷயங்களை உணர்த்தியது.
மன்னர்கள் கடவுள்கள் அல்ல, ஆட்சியாளர்கள் அவர்கள் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள், சேவை, ஆட்சி செய்வது குறித்து திருக்குறள் சொல்கிறது. வெளியுறவு கொள்கைகள் குறித்தும் அந்நிய நாடுகளுடன் உறவை பேணுவது பற்றியும் சொல்கிறது. வாழ்க்கையின் பின் உள்ள தத்துவங்களை சொல்கிறது. இது எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. திருக்குறள் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாக பார்க்கிறது. இது நூல் அல்ல வாழ்க்கையின் தொகுப்பு.

வைகாசி அனுஷம், தமிழ் நாள்காட்டி திருவள்ளுவரை கொண்டாடுகிறது. இந்த விழாவை எடுத்ததன் மூலம் ஒரு சீடனாக என் குருவுக்கு அளித்த காணிக்கையாக இதை கருதுகிறேன். திருக்குறளை பலரும் பல்வேறு விதங்களில் மொழிப்பெயர்த்துள்ளனர். தத்துவார்த்த ரீதியாகவும் அறிவார்ந்த ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் அணுகியுள்ளனர். ஒவ்வொரு ரீதியிலும் வெவ்வேறு பரிமாணங்களை அளிக்கும் திருவள்ளுவர் இந்த புண்ணிய பூமியில் அவதரித்தற்கு நாம் பெருமை கொள்ளவேண்டும்.

நான் என்னால் முடிந்த அளவு ஒரு மாணவனாக, சீடனாக திருக்குறளை தமிழகத்திற்கு வெளியே கொண்டு சேர்ப்பேன். மேற்கத்திய நாடுகளுக்கும் திருக்குறள் உலகம் முழுவதிலும் மொழிப்பெயர்க்கப்படவேண்டும். பிரதமர் நமது திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தவத்திரு சுவாமி மகேந்திரா, ஸ்ரீ ஆதி சங்கரர் திருமடம், (கோலாலம்பூர், மலேசியா) ஆற்றிய உரையில், திருக்குறள் ஒருவரின் உயிரை விட மேன்மையான சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் உள்ளதாக பாராட்டினார். ஆதிசங்கரரின் சித்தாந்தங்களை மலேசியா முழுவதும் செயல்படுத்த இந்த புனித நூல் எவ்வாறு வழிகாட்டியது என்று அவர் விளக்கினார். திருக்குறள் நமது வேதங்களிலும் உபநிடதங்களிலும் வெளிப்படும் விருந்தோம்பலை சிறப்பித்துக் காட்டுகிறது. நற்குணத்தை தன்னுள் வளர்க்க தெய்வீகத்தை உணருமாறும் திருவள்ளுவர் அறிவுறுத்தினார்.

பேராசிரியர் சாமி. தியாகராஜன், தலைவர் திருவள்ளுவர் - திருநாள் கழகம், வைகாசி அனுஷம் திருநாளின் சிறப்புகளை நிகழ்ச்சியில் விவரித்தார். பேராசிரியர். சாமி.தியாகராஜன், திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவர் அவர்கள், வைகாசி அனுஷம் திருநாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழா குறித்த விவரங்களை விளக்கினார். திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி விசாகத்தை கொண்டாடுகிறார்கள்.

1935 ஆம் ஆண்டு மே, 18 வைகாசி அனுஷ்டத்தை அண்ணா கொண்டாடினார். அதை ஒப்புக்கொண்டவர்கள் பின் ஏன் மாற்றினீர்கள்? இன்றைக்கும் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தென் காசியில் வைகாசி விசாகத்தை கொண்டாடுகிறார்கள்.

டாக்டர் டி.கே. ஹரி மற்றும் டாக்டர். ஹேமா ஹரி ஆகியோர், "வைகாசி அனுஷம்" என்பதன் முக்கியத்துவத்தையும், நமது கிரக நிலைக்கேற்ப இந்த நிகழ்வின் தனித்துவத்தையும், திருவள்ளுவருடன் அது கொண்டிருக்கும் ஆழமான தொடர்பையும் எடுத்துரைத்தனர். '
திருவள்ளுவரை உலகுக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒரு தெய்வப் புலவர்' என்று அழைத்தனர்;

மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் கலைமாமணி டாக்டர். சேயோன், மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அபாரமாகக் கையாண்ட தெய்வீகப் புலவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெரும் படைப்பான 'திருக்குறள்' உலகப்பொதுமறையாகவும் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வெற்றிகரமான, அர்த்தமுள்ள இருப்புக்கான நித்திய செய்முறையாகவும் விளங்குகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி, தவத்திரு சுவாமி மகேந்திரா ஆதிசங்கர திருமடம், (கோலாலம்பூர், மலேசியா), பேராசிரியர் சாமி. தியாகராஜன், தலைவர் திருவள்ளுவர் திருநாள் கழகம், கலைமாமணி முனைவர் சேயோன், நிறுவனர் மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், பேரா. இரா. சந்திரசேகரன், இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், முனைவர் டி.கே.ஹரி, முனைவர் டி.கே. ஹேமா ஹரி, திரு.K.கல்யாணசுந்தரராஜன், திருவள்ளுவர் பாசறை (மஸ்கட்), பேராசிரியர் N.லட்சுமி ஐயர், ஹிந்தி துறை, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், பேராசிரியர் ப.மணிசங்கர், முன்னாள் துணை வேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திரு. C.O. மணி, பொது செயலாளர், கேரளா ஆதி திருவள்ளுவர் ஞானமடம், முனைவர் பு. அறிவுடைநம்பி, பேராசிரியர் ப. மருதநாயகம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம், சிவாலயம் ஜெ. மோகன், நிறுவனர், சிவாலயம் பதிப்பகம் மற்றும் வள்ளுவர் சமுதாய மக்கள் ஆகியோர்களுக்கு திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் புகழ் மற்றும் சிறப்புகளை பரப்பும் பெரும்பணிக்காக கௌரவித்தார். மேலும் ஆளுநர் வள்ளுவர் வந்தார்' என்ற தலைப்பில் வில்லுபாட்டு கலைநிகழ்ச்சியை வழங்கிய கலைமாமணி பாரதி திருமகன் மற்றும் குழுவினரை கௌரவித்தார்.

முன்னதாக, ஆளுநர், திருவள்ளுவர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாரத ஞானத்தின் நிறுவனர்களான டாக்டர் டி.கே. ஹரி மற்றும் டி.கே. ஹேமா ஹரி எழுதிய "திருவள்ளுவர் புரவலர் துறவி" என்ற மின்னணு திருப்பு தமிழ்நாட்டின் புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார். இந்நூல் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளின் உலகளாவிய கருப்பொருள்களை ஆராய்ந்து, அதை பாரதிய கலாசாரம் மற்றும் தர்ம நெறிமுறைகளுடன் இணைக்கிறது.

இந்நிகழ்வில் ஆர்.கிர்லோஷ் குமார், ஐ.ஏ.எஸ்., ஆளுநரின் செயலாளர், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், ஆன்மிக மற்றும் பண்பாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், ஆய்வறிஞர்கள், கல்வியாளர்கள், பல்வேறு திருவள்ளுவர் சங்கங்களின் உறுப்பினர்கள், இந்திய அளவிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் (காணொளி வாயிலாக) பங்கேற்றனர்.

Tags :
Advertisement