காசாவின் போர்நிலை குறித்து அறிவுரை கூறிய கனடா பிரதமர் - பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர்!
காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார்.
காசாவில் நடைபெற்றுவரும் இடைவிடாத போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இஸ்ரேல் அரசு அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க நான் கோருகிறேன். உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, சமூக ஊடகம் வாயிலாக மருத்துவர்கள், குடும்பத்தினர், உயிர் பிழைத்தவர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் சாட்சியங்கள் வந்து சேர்கின்றன. பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் கொல்லப்படுவதை உலகம் பார்க்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில், "பொதுமக்களை குறிவைப்பதற்கு இஸ்ரேலை அல்ல ஹமாஸை தான் குற்றஞ்சாட்ட வேண்டும். அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து எம்மக்களை தலையைத் துண்டித்தும், எரித்தும் படுகொலை செய்தனர். யூத இன அழிப்புகளிலேயே அண்மைக்காலத்தில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல் இது.
It is not Israel that is deliberately targeting civilians but Hamas that beheaded, burned and massacred civilians in the worst horrors perpetrated on Jews since the Holocaust.
While Israel is doing everything to keep civilians out of harm’s way, Hamas is doing…
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) November 15, 2023
இஸ்ரேல் பொதுமக்களை ஆபத்தில் இருந்து விலக்கிவைக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்கிறது. ஆனால் ஹமாஸ் அப்பாவி பொதுமக்களை ஆபத்தின் வழியில் நிறுத்துகிறது. நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் காசாவில் பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால் ஹமாஸ் துப்பாக்கி முனையில் அவர்களைத் தடுக்கிறது. இஸ்ரேல் அல்ல ஹமாஸ் தான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பாக்கப்பட வேண்டும். அவர்கள் இரட்டை போர்க்குற்றம் புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலில் பண்பட்ட நாடுகள் ஹமாஸின் காட்டுமிராண்டித்தனத்தை தோற்கடிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இதேபோல் கருத்துக்கூறி பெஞ்சம்ன் நெதன்யாகுவின் எதிர்வினையை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.