வானளவு உயர்ந்த பூக்களின் விலை... ஒரு கிலோ மல்லி ரூ.4200-க்கு விற்பனை!
பொதுவாக பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். காரணம் பண்டிகை நாட்களில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் தற்போது பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூ வணிக வளாகத்திற்கு, திண்டுக்கல்லை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி
மாநிலங்களுக்கும் தினசரி பல டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4200-க்கும், முல்லைப் பூ 2500 ரூபாய்க்கும், ஜாதிப்பூ 1700 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1700 ரூபாய்க்கும், காக்கரட்டான் 1500 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் பட்டன் ரோஜா 400 ரூபாய்க்கும், அரளிப்பூ 350 ரூபாய்க்கும், சம்பங்கி 270க்கும், செவ்வந்திப் பூ 260 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.