நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.68 கோடியாக உயர்வு!
டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.24 கோடியிலிருந்து ரூ.1.68 கோடியாக உயர்ந்துள்ளது.
டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை 2022 இல் ரூ.1.24 கோடியாக இருந்த நிலையில், 2023 இல் ரூ.1.68 கோடியாக உயர்ந்துள்ளது. நொய்டாவில் 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 14,822 அடுக்குமாடி குடியிருப்புகள் கிட்டத்தட்ட ரூ.24,944 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. நம்பிக்கைக்குரிய வளர்ச்சி வாய்ப்புகள், அதிகரித்த முதலீடுகள், மேம்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்தர வீடுகள் போன்ற காரணிகளால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய டெவலப்பர்கள் தங்கள் திட்டங்களை அறிமுகப்படுத்த ஒரு முக்கிய இடமாக நொய்டா உள்ளது. மேலும், பல திட்டங்களும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் நிலங்களை தீவிரமாகக் கையகப்படுத்தியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் மட்டும், நொய்டாவில் சுமார் ரூ.1,775 கோடி மதிப்புள்ள 59 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர்.