“குடியரசுத் தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே” - உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி!
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய அவர், “நீதித்துறை சூப்பர் பார்லிமெண்ட் ஆக முடியாது என்றும், அரசியலமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே என துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்திருந்தார்.
ஜகதீப் தன்கரின் இந்த கருத்துக்கு மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய கபில் சிபல்,
“ஒரு நிர்வாகம் தனது கடைமையை சரிவர செய்யவில்லை என்றால், நீதித்துறை தலையிட வேண்டும். அதைச் செய்வது அவர்களின் உரிமை. நீதித்துறையின் சுதந்திரம் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. ஜகதீப் தன்கரின் அறிக்கையைப் பார்த்து நான் வருத்தமும், ஆச்சரியமும் அடைந்தேன். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நம்பகமான ஒரு துறை உள்ளது என்றால் அது நீதித்துறைதான்.
குடியரசுத் தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே. குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் அதிகாரம் மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறார். குடியரசுத் தலைவருக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை. இதை எப்படிச் சொல்ல முடியும்?. சட்டப்பிரிவு 142 உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதுவும் அரசாங்கத்தால் அல்ல, அரசியலமைப்பால்.” என தெரிவித்தார்.