அமலுக்கு வந்தது தபால் அலுவலகச் சட்டம் 2023!
தபால் அலுவலகச் சட்டம் 2023 நேற்று முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
“தபால் அலுவலகச் சட்டம் 2023 ஜூன் 18 முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் இந்திய தபால் அலுவலகச் சட்டம் 1898 ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மாநிலங்கவையில் இந்த தபால் அலுவலகச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் டிசம்பர் 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து டிச.24ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்த தபால் அலுவலகச் சட்டம் 2023, 1898ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தபால் அலுவலக சட்டத்தை முற்றிலும் மாற்றுவதாக அமைந்துள்ளது. ஏனெனில், பல காலகட்டமாக தபால் சேவைகள் என்பது கடிதங்கள், நிதி மற்றும் கொரியர் சேவைகளை வழங்கி வருகின்றது.
இதில் அனுப்பப்படும் கடிதங்களை பிரித்து பார்க்கவோ, தடுத்து நிறுத்தவோ தபால் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதே இந்திய தபால் அலுவலக சட்டம் 1898. ஆனால், இந்த புதிய மசோதா மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, அவசரநிலை மற்றும் பொதுபாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அனுப்பப்படும் கடிதங்களை இடைமறிக்க, திறக்க மற்றும் தடுத்து நிறுத்த தபால் அலுவலர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
இந்த சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே இதற்கு பல கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அவற்றை அனைத்தையும் தாண்டி தற்போது அமலுக்கு வந்தது.