“2032 அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘AI வேட்பாளர்’ வெல்ல வாய்ப்பு...” - எலான் மஸ்க் கருத்து!
2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ’செயற்கை நுண்ணறிவு’ சார்பிலான வேட்பாளர் போட்டியிடவும், வெல்லவும் வாய்ப்பிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தான் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றினார். இந்த ஆண்டு வரை அதனை தக்கவும் வைத்துக்கொண்டார். அண்மையில், பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். எலான் மஸ்க் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை இன்றே ஆராய்வதில் ஆர்வம் உடையவர். அதற்கு அவர் வெளியிடும் கணிப்புகள் மற்றும் ஆருடங்கள் உலக அளவில் கவனம் பெறுவதும் வழக்கம்.
அந்த வகையில் 2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ’ஏஐ வேட்பாளர்’ களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நடப்பு 2024-ம் ஆண்டு இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் பல்வேறு நாடுகளின் தேர்தலுக்கான ஆண்டாக சிறப்பு பெற்றுள்ளது. அமெரிக்காவின் தேர்தலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டினை எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதனையொட்டி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி எலான் மஸ்கிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும்போது 2032-ம் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வேட்பாளராக களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.