“யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!
யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன எனவும், தேர்தல் முடிவுகளுக்கும், கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமே இருக்காது எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
“வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும் நிலையில் அதன் முடிவுகளை கருத்துக்கணிப்பு எனும் பெயரில் முன்கூட்டியே கூறுவது ஏற்புடையதல்ல. 5 அல்லது 6 கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களை வைத்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது.
பாஜக ஒரு மாநிலத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 15 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 13 தொகுதிகளில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கும், கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமே இருக்காது. நாளை வெளிவரக்கூடிய தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.