‘ஆப்கானிஸ்தானில் விபத்துகுள்ளான விமானம் இந்திய விமானம் இல்லை’- மத்திய அரசு விளக்கம்..!
‘ஆப்கானிஸ்தான் நாட்டில் விபத்துகுள்ளான விமானம் இந்திய விமானம் இல்லை’ என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டில் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளிவந்தன. ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.
பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விமானம் விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியான நிலையில், விபத்துக்குள்ளான விமானம் எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது, விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், தற்போது அவர்களின் நிலை என்ன என்பன குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில், ‘ஆப்கானிஸ்தான் நாட்டில் விபத்துகுள்ளான விமானம் இந்திய விமானம் இல்லை’ என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் எனவும் குறிப்பிட்டுள்ளது.