Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அண்ணாமலை தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

11:48 AM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன்,  தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக,  சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ்,  அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில்,  இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம்,  வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு  சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.  இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும்,  நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்,  வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,  வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,  தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  ஒராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போதும்,  அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

Tags :
AnnamalaiHigh court
Advertisement
Next Article