சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள மிக பழமையான மூன்று விஷ்ணு ஆலயங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக பெருமாள் சயன கோலத்தில் இடது புறத்திலிருந்து, வலது புறமாகத்தான்
காட்சி அளிப்பது வழக்கம்.
ஆனால் இத்திருக்கோயிலில் மட்டும் வலது புறத்திலிருந்து இடது புறமாக சயன கோலத்தில் கோமளவல்லி தாயாருடன் யதோத்தகாரி பெருமாள் காட்சியளிப்பார். பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் இத்தல பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த புகழ்பெற்ற திருக்கோயிலின் பிரம்மோற்சவம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறும். அந்த வகையில் இன்று காலை கோயிலின் கொடிமரத்துக்கு அருகே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் யதோத்தகாரி பெருமாள் எழுந்தருளி கருட உருவம் பதித்த கொடிக்கு பாராயணம் மற்றும் தூப தீப ஆராதனைகள் செய்து கொடி மரத்தில் கோவில் குருக்கள் கொடியேற்றினர். அப்பொழுது மங்கள வாத்தியங்கள் முழங்கப்பட்டன.
பின்னர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் யதோத்தகாரி பெருமாள் கோவிலை வளம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று முதல் 11 நாட்கள் பிரம்மோற்சவம் விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 1ம் தேதி வரை தினந்தோறும் பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளிப்பாா்.
இதனை தொடர்ந்து மாா்ச் 24ம் தேதி காலை கருட சேவையும், மாலை அனுமந்த வாகனத்திலும், மாா்ச் 28-இல் தேரோட்டமும் நடைபெறுகிறது.