குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் உயிரிழப்பு!
குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(48). இவர் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் டிச9 அன்று, இரவு மது குடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அச்சாலை ஓரம் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனை கண்ட தேவராஜ் பாம்பை கையில் பிடித்து கொண்டு சாலையில் நின்று சாகசம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்துள்ளது. பிறகு வலியால் துடித்த அவர் அவ்விடத்திலே மயங்கி விழுந்தார். அருகில் இருந்த மக்கள் பாம்பிடம் இருந்து தேவராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு விஷம் தலைக்கு ஏறியதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.