Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் நிகழ்வை ஒத்திவைத்த ஏகனாபுர கிராம மக்கள்!

04:26 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திர மாநிலம் சித்தூரில் குடியேறுவதற்காக அம்மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருந்த நிகழ்வினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக ஏகனாபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை
உள்ளடக்கி சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம்
அமைக்க மத்திய,மாநில அரசுகள் முடிவு செய்து அதற்கான நில எடுப்பு அறிவிப்பை
சமீப நாட்களாக தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது.

விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியான நாள் முதல் தற்போது வரை 700 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் தொடர் போராட்டங்களிலும், இரவு நேரங்களில் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தொடர்ச்சியாக நிலஎடுப்பு அறிவிப்புகள் வருவதை தொடர்ந்து ஏகனாபுரம் பகுதி கிராம மக்கள், தமிழகத்தில் இருந்து வெளியேறி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குடியேற முடிவு செய்துள்ளனர்.

இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்டும், நாளை சந்திக்க திட்டம் உள்ளதாக போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர். நாளை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று ஏகனாபுரம் கிராம பள்ளியில்  ஓன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர்.

மேலும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட துயர
சம்பவத்தில் பலர் உயிரிழந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது
நிலைப்பாட்டினையும், போராட்டங்களையும் அறிவித்து வருகின்றன. இதனால் நாளை
சித்தூர் மாவட்ட ஆட்சியர் நிகழ்வினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக போராட்டக்
குழுவினர் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி கூறுகையில்,
“பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக 700 நாட்களாக விவசாயத்தை காக்கும் வகையில் அனைத்து கிராம மக்களும் முன்னெடுத்து வருகிறோம். இருப்பினும் தொடர்ச்சியாக நில எடுப்புக்காக அறிவிப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதனால் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலம் சித்தூரில் குடியேற முடிவு செய்துள்ளோம். இதற்காக நாளை சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருந்தோம்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்காக, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாடு மற்றும் போராட்டங்களை அறிவித்து வருகிறது.
இச்சூழலில் அரசுக்கு நாங்களும் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. எனவே மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் இந்த நிகழ்வினை தற்காலிகமாக சற்று தள்ளி வைப்பதாகவும், ஆனால் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

Tags :
Andhra PradeshChittoorParandur AirportProtest
Advertisement
Next Article