“இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்” | தமிழ்நாடு அரசுக்கு டி.டி.வி.தினகரன் பாராட்டு!
நல்ல அதிகாரிகளின் செயல்பாட்டால் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலானது நேற்று கடந்த போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கூவம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் காற்று நின்ற நிலையில், நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரை வடிய வைப்பதற்கான பணிகளில் பல்வேறு அரசு ஊழியர்களும் ஈடுபட்டுனர். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை மழை வெள்ளம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“சென்னை மக்களை காப்பாற்றாமல் விட்டுவிடுவார்களோ என அஞ்சினோம். ஆனால் நல்ல விதமாக அனைத்து மக்களையும் காப்பாற்றியுள்ளனர். நல்ல அதிகாரிகளின் செயல்பாடுகளால் சென்னை தப்பியது என்றே கருதுகிறேன்.
தொடர்ந்து மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.