“பரமபத வாசல் திறப்பு... முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு டிக்கெட் இலவசம்” - அமைச்சர் சேகர்பாபு!
“திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பரமபத வாசல் திறப்பை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகிக்கப்படும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்து செய்தார். இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைவருக்கும், அனைத்தும் சமமாக இருக்கும் வகையில் பொது வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருபது இடங்களில் குடிநீர் வசதிகளும், 20 இடங்களில் கழிப்பிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஷிஃப்ட் என்ற அடிப்படையில், ஷிப்ட்டுக்கு 100 துப்புரவு பணியாளர்கள் வீதம் 300 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோருக்கு தனியாக வரிசை அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இருந்த குறைகளை நிவர்த்தி செய்து, முடிந்த அளவு சிறப்பாக இந்த ஆண்டு ஏற்பாடு செய்யபட்டு இருக்கிறது. ஆம்புலன்ஸ் வசதிகளும், போலீஸ் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 500 நபர்களுக்கு இலவசமாக டிக்கெட்கள் விநியோகிக்கப்படுகிறது.
பரமபத வாசல் காலை 4:30 மணிக்கு திறக்கப்படும். சிறப்பு தரிசனம் அனைத்தும் ஆறு மணிக்கு உள்ளாக முடிந்த பிறகு பொது வரிசை 6 மணியிலிருந்து அனுமதிக்கப்படும்” என தெரிவித்தார்.