நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
நெல்லை மாவட்டம் பழவூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் ஆனந்த நடராஜர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிக முக்கியமானது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர்.
பின்னர் கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காட்டப்பட்டது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் வருகின்ற 11ஆம் தேதி பங்குனி உத்திரம் நடைபெறுகிறது.
இந்த பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த விழா ஏற்பாடுகளை மண்டக படிகாரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர்
செய்துள்ளனர்.