"ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரப் பயணத்தில் நேற்று இரவு தமிழ்நாடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூருக்கு வருகை தந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் மாவட்ட எல்லையான கானூர் பகுதியில் அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கீழ்வேளூர் கடைவீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
"விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாத்த அரசு அதிமுக அரசு. மீத்தேன் எடுப்பதற்கு திட்டமிட்ட பகுதிகளை தடுத்து நிறுத்தி வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகள் நிலங்களை யாரும் பறிக்க முடியாது படி செய்தது அதிமுக அரசு என பெருமிதம் தெரிவித்தார். விவசாய நிலங்களை கொல்லை அடிக்க வந்தது திமுக அரசாங்கம் என குற்றம் சாட்டியவர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் மேலாண்மை ஊக்குவிக்க ஏரி குளம் குட்டைகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு என்றார். திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில்
குறுவை பயிர் சாகுபடி செய்யப்படாத நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் திறந்தும் டெல்டா மாவட்டங்களுக்கு உரிய நீர் வராததால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கூட வழங்காத அரசு திமுக அரசு.
விவசாய தொழில் கடினமான தொழில் என்பதை உணர்ந்து அதிமுக அரசு இரண்டு முறை விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் உள்ளதை அதிமுக ஆட்சி அமைந்த உடன் தீர்க்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம் தற்பொழுது கிடைக்கவில்லை கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உரம் வாங்குவதற்கு ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது போல் விவசாயிகள் நிற்கின்றனர். இந்த ஆட்சி தேவையா?
அமலாக்கத்துறை 40 ஆயிரம் கோடி டாஸ்மார்க் ஊழல் கண்டுபிடித்துள்ளனர். அடுத்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பலர் பத்திரமாக இருப்பார்கள். அவர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பார்கள். திமுக குடும்ப கட்சி தான் என பகிரங்கமாக ஸ்டாலின் பேசுகிறார். திமுக கட்சி அல்ல கம்பெனியாக மாற்றிவிட்டனர். அந்த கம்பெனியில் கோடிக்கணக்கில் பணம் குவிந்து வருகிறது. விவசாயிகளின் கஷ்டங்கள் உணர்ந்து அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு மாடு, கோழி வழங்கப்பட்டது. நாட்டு மக்கள் போற்றும் வகையில் அம்மாவும் நல்லாட்சி வழங்கினார். பின்பு வந்த நாங்களும் வழங்கினோம். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும்.
தொண்டர்களின் கட்சியான எங்கள் கட்சி நன்றாக தான் இருக்கிறது, உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றுங்கள். ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்த நீங்கள், வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள். விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைக் கண்டு கொள்ளாத ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது.
இது போன்ற மக்கள் விரோத ஆட்சி தேவையா? கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட வேளாண் கல்லூரிக்கு இதுவரை கட்டிடம் கட்டவில்லை இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக ஆட்சியில் எந்த திட்டம் அறிவித்தாலும் உடனடியாக அதற்கான கட்டிடம் வழங்கி நல்ல கல்வி வழங்கியுள்ளோம் என பெருமையாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட டிராக்டரில் கூட லஞ்சம் கொடுத்தால் தான் வழங்கப்படும் நிலை உள்ளது.
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் மக்களின் ஞாபகம் தற்போது ஸ்டாலினுக்கு நினைவு வந்துள்ளது. 45 நாளில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குறைகளை தீர்வு செய்யப்படும் என்றால் நான்காண்டுகளாக என்ன செய்து வந்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியை இந்த முறை கூட்டணிக்கு வழங்காமல் அதிமுக வேட்பாளர் நிறுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவித்தார்.