“திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல..” - நடிகர் சத்யராஜ் பேச்சு!
“திரையில் வீரத்தைக் காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல, தரையில் வீரத்தை காட்டுபவர்கள் தான் சூப்பர் மேன்.. அப்படி என்னை பொறுத்தவரை தரையில் வீரத்தைக் காட்டிய தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தான் சூப்பர் மேன்” என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்ஷன் படம் ‘வெப்பன்’. இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லியன் ஸ்டூடியோ புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். இப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர் மாலில் நேற்று (மே 17) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ், மைம் கோபி, நடிகை தான்யா ஹோப், இயக்குநர்கள் குகன் சென்னியப்பன், ஆர்.வி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ்,
“நீங்கள் ( ரசிகர்கள்) சௌக்கியமாக இருந்தால், நாங்களும் சௌக்கியம் தான். திரையில் வீரத்தைக் காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல. தரையில் வீரத்தை காட்டுபவர்கள் தான் சூப்பர் மேன், சூப்பர் ஹீரோ. அப்படி என்னை பொறுத்தவரை தரையில் வீரத்தைக் காட்டிய தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தான் சூப்பர் மேன்.
அவர் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை போர், சர்வதேச வல்லரசு நாடுகளின்
தவறான புரிதலால் மற்றும் மிகப்பெரிய சூழ்ச்சிகளால் ஒடுக்கப்பட்டுள்ளது என்பதை
பின்னடைவு என்று தான் கூறவேண்டும். என்றைக்காவது ஒருநாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம். ஏன் இன்றைக்கு இதை பேசினேன் என்றால் இன்று மே 17, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த நாள்.
இந்தப் படத்திற்கு அங்கும் இங்கும் பேனர் வைத்த காசை வைத்து இன்னும் இரண்டு படங்கள் எடுத்திருக்கலாம். விஜயகாந்திற்கு எத்தனையோ நல்ல பாட்டு இருக்கு. ஆனால் ‘வானத்தை போல மனம் படைத்த மன்னவனே’ என்ற அழகான பாடலை கொடுத்தவர் என்னுடைய நண்பர் ஆர்.வி.உதயகுமார் தான்.
தமிழ் சினிமாக்கள் இன்று உலகம் முழுவதும் செல்கிறது. அதற்கு காரணம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்கள் தான். சில படங்கள் நடிகர்களை வைத்து ஜெயிக்கும், சில படங்கள் கதையை வெற்றி பெறும். இந்தப் படம் கிராபிக்ஸ் வைத்து ஜெயிக்கும். டெக்னிக்கல் ஆக வளரும் போது தான் உலக சினிமாக்களுடன் போட்டிப் போட முடியும். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம் மேக்கிங். ஆனால் இப்போது கதை கேட்டு முடிவு செய்ய முடியாது. ஒரு கேரக்டர் கார்ட்டூனாக மாறி விட்டால் அது காலத்தால் அழியாத கதாபாத்திரம். அப்படி இந்த கேரக்டர் நல்லா இருக்கு” என தெரிவித்துள்ளார்.