For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘உழைக்கும் மக்களின் தோழர்’- வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு என முழங்கியவர் | யார் இந்த சங்கரய்யா?...

11:05 AM Nov 15, 2023 IST | Web Editor
‘உழைக்கும் மக்களின் தோழர்’  வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு என முழங்கியவர்   யார் இந்த சங்கரய்யா
Advertisement

வறுமையின் நிறம் சிவப்பு அல்ல,  வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு என சட்டப்பேரவையில் முழங்கியவர் என்.சங்கரய்யா.  தன் வாழ்நாளெல்லாம் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர்.  அவரது வாழ்க்கை பயணம் பற்றி தற்போது பார்க்கலாம்.....

Advertisement

பொது வாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் கடைசி மூச்சு வரை கம்யூனிச கொள்கை பிடிப்புடன் இருந்தவர்.  இந்திய விடுதலை போராட்டம்,  தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம்,  விவசாயிகளுக்கான போராட்டம் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான போராட்டம் என தம் வாழ்நாட்களையெல்லாம்,  போராட்டக் களங்களிலேயே கழித்தவர் என்.சங்கரய்யா என்றால் மிகையல்ல.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் அரசு துறையில் பொறியாளராக இருந்த நரசிம்மலு -ராமானுஜம் தம்பதிக்கு மகனாக 1922ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி சங்கரய்யா பிறந்தார். இவருக்கு 8 சகோதர - சகோதரிகள்.  சங்கரய்யாவின் தந்தையும்,  தாத்தா சங்கரய்யாவும் சுயமாரியதை இயக்க தொண்டர்களாக இருந்ததால் சங்கரய்யாவுக்கு கம்யூனிச கொள்கைகள் மீது சிறு வயது முதலே ஆர்வம் இருந்து வந்தது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார்.  பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கல்லூரி மாணவர்களிடம் விடுதலைப் போராட்ட உணர்வை ஏற்படுத்தியதால் காவல் துறையின் கண்காணிப்புக்கு உள்ளானார்.  சிறைக்கும் சென்றார்.  மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை அழைத்து வந்து கூட்டம் நடத்தியதற்கு வெகுமதியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி,  இந்தியை கட்டாயப் பாடமாக்கியபோது, அதனை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தினார்.  மதுரையில் 1940ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவாக்கப்பட்டது.  அதன் முக்கிய பொறுப்பாளராக என்.சங்கரய்யா செயல்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதிக்கப்பட்டதால்,  கட்சித் தலைவர்கள் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.  திருநெல்வேலி மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக சங்கரய்யா கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு ப.ஜீவானந்தம், வ.சுப்பையா,  சீனிவாசராவ்,  காமராஜர் என பல தலைவர்களிடம் அரசியல் பயின்றார்.

சிறை மீண்டு வந்த பின் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழுவின் தலைவரானார் சங்கரய்யா.  பிரிட்டிஷ் அரசால் மதுரைச் சதி வழக்கில் சங்கரய்யாவும் கைதாகி ,8 மாதங்கள் சிறையில் இருந்தார்.  1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு,  அதாவது இந்திய சுதந்திரத்திற்கு முதல் நாள் சங்கரய்யா விடுவிக்கப்பட்டார்.  அடுத்த சில நாட்களில் ஆசிரியையான நவமணியுடன் இல்லற வாழ்வில் இணைந்தார்.

விடுதலைக்கு பின்னும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.  2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தபடி, மாறுவேடத்தில் கட்சிப் பணியாற்றினார்.  1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக மூலகாரணமாக இருந்த 32 பேரில் சங்கரய்யாவும் ஒருவர்.  1967 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - திமுகவுடன் கூட்டனி வைக்க சங்கரய்யாவும் முக்கிய காரணம்.

1967,  1977, 1980 என மூன்று முறை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பேரவையில் வறுமையின் நிறம் சிவப்பு அல்ல, வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு என முழங்கினார்.  அரசின் நியாய விலைக்கடை என அழைக்கப்படும் ரேசன் கடைகளை அனைத்து கிராமங்களிலும் திறக்க கோரிக்கை வைத்தார்.  முதலமைச்சர் எம்ஜிஆர் அதை செயல்படுத்தினார்.  என் ஒருவனுக்கு ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால் அனைத்தையும் சங்கரய்யாவுக்கு செலுத்துவேன் என கூறி நெகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

ஜனசக்தி இதழுக்கும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிருக்கும் முதல் ஆசிரியர் சங்கரய்யா.  தொடர்ந்து பல ஆண்டுகள் கட்சியின் மத்தியக் குழுவில் அங்கம் வகித்தார்.  1995 ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் மாநிலச் செயலராக இருந்தார்.

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் ஏராளமான சீர்த்திருத்த திருமணங்களை நடத்தியவர்.  தமது குடும்பத்திலும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி முன்னுதாரணமாக வாழ்ந்த தலைவர் சங்கரய்யா.  நன்றாக வெளியிடங்களுக்கு நடமாடிய 95 வயது வரை பல போராட்ட களங்களை கண்டவர்.

பொதுவாழ்வின் மூலம் தமிழ்நாட்டிற்கு, மாபெரும் பங்காற்றிய தோழர் சங்கரய்யாவுக்கு, தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை 100 வது பிறந்த நாளில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். வி ருதைப் பெற்ற முதல் ஆளுமையான சங்கரய்யா, விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சத்தை அரசுக்கே திருப்பி தந்தார்.

தனது 102 வயதிலும் இளைஞர்கள் மத்தியில் மார்க்ஸ்,  லெனின்,  ஏங்கல்ஸ்,  பெரியார், அம்பேத்கர் ஆகியோரை கொண்டு செல்ல வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்த  ‘உழைக்கும் மக்களின் தோழர்’ எனப் போற்றப்படும் என்.சங்கரய்யா இன்று (15.11.2023) மறைந்தார்.

Tags :
Advertisement