100 வயதை எட்டிய மூதாட்டி - உறவினர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
100 வயதை எட்டிய மூதாட்டிக்கு அவரது உறவினர்கள் 80-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. எங்கு நடந்தது இந்த சம்பவம்? செய்தித் தொகுப்பில் காணலாம்...
ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே காளிகாதேவி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாப்பம்மாள். 1924-ம் ஆண்டு ஆண்டு பிறந்த பாப்பம்மாளுக்கு இப்போது வயது 100-ஐ கடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, மட்டை அரிசி, சோளம் போன்றவற்றை உண்டு வளர்ந்த பாப்பம்மாள், தனது வேலைகள் அனைத்தையும் தானே செய்துகொண்டு தற்போது வரை எந்தவித நோய் நொடிகளுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.
மூதாட்டி பாப்பம்மாளுக்கு 2 மகன்கள், 6 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர். தாயின் 100வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட எண்ணிய அவர்கள், பிப்ரவரி 4-ம் தேதி அவரது பிறந்தநாளன்று தங்கள் குடும்பத்தினருடன் திடீரென மூதாட்டி பாப்பம்மாளின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்திகள் என சுமார் 80-க்கும் மேற்பட்டோர் தன்னைக் காண ஒரே சமயத்தில் வந்ததைக் கண்டு, மூதாட்டி பாப்பம்மாள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தார். ஒட்டுமொத்த குடும்பமும் மூதாட்டி பாப்பம்மாளின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதுடன், ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை, மலர் மாலைகள், சால்வைகள் ஆகியவற்றை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தனர்.
அத்துடன் தங்கள் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கியும் பாப்பம்மாளின் குடும்பத்தார் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் பாட்டிக்கு இதுவரை மருத்துவமனைக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டதில்லை எனவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக அவர் வாழ்ந்து வருவதாகவும் பாப்பம்மாளின் பேரன், பேத்திகள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
வீட்டில் உள்ள முதியவர்களை காப்பகங்களில் தள்ளிவிட்டு தங்கள் வேலைகளை கவனிக்கும் இன்றைய சமுதாயத்தில், மூதாட்டி பாப்பம்மாளின் 100வது பிறந்தநாளை அவரது குடும்பமே சேர்ந்து கோலாகலமாக கொண்டாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.